பிறை பற்றிய தெளிவான விளக்கம்



நோன்பு வைப்பதற்கும், இரு பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா? அல்லது அந்தந்த பகுதியில் பிறையை பார்த்தாக வேண்டுமா?

♣ பிறை தொடர்பாக சமூகத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள்

இஸ்லாத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மார்க்கத்தில் பிறையையும் முடிவு செய்வது எப்படி என்பதை அல்லாஹ்வும், அவனது ஹபீப் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தெள்ளத்தெளிவான வாசஹங்களினால் தெளிவு படுத்தியுள்ளார்கள். அவைகளை பின்வருமாறு தெளிவாக விளங்கியுள்ளோம் ஆனாலும் வழிகேடர்களின் சூழ்ச்சியின் காரணமாக பிறை பற்றி முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான மூன்று கருத்து வேறுபாடுகள் ஊடுருவி விட்டது.

1) சர்வதேச உலகில் குறித்த ஒரு பகுதியில் பிறை தென்பட்டு அது உரிய சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்ஸிம்கள் அனைவரும் அதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்து) நோன்பு நோற்பது மற்றும் பெருநாள் கொண்டாடுவது). பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும்.

2) சர்வதேச உலகில் குறித்த ஒரு பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட இந்தியா போன்ற நாட்டிற்குள் பிறை தென்பட்டு அது உரிய சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டில் முழுவதிலும் உள்ள முஸ்ஸிம்கள் மாத்திரம் அதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்து (நோன்பு நோற்பது மற்றும் பெருநாள் கொண்டாடுவது). பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும்.

3) சர்வதேச உலகில் குறித்த ஒரு நாட்டிற்குள் பிறை தென்பட்டு அது உரிய சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் அந்த நாடு முழுவதிலும் உள்ள முஸ்ஸிம்கள் மாத்திரம் அதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்து (நோன்பு நோற்பது மற்றும் பெருநாள் கொண்டாட வேண்டும்). பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும். 

அதே சமயம் குறித்த ஒரு நாட்டிற்குள் பிறை தென்படும் போது இந்தியா போன்ற பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட பெரிய நாடாக இருக்கும் பட்சத்தில் அவ்நாட்டிற்குள் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநில எல்லையிலும் பிறை தென்பட்டு அது உரிய சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் அந்த மாநிலத்தில் உள்ள முஸ்ஸிம்கள் மாத்திரம் அதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்து (நோன்பு நோற்பது மற்றும் பெருநாள் கொண்டாட வேண்டும்). பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

அதாவது இலங்கை, சிங்கப்பூர் போன்ற சிரிய நாடுகளுக்குள் ஏதோ ஒரு பகுதியில் (ஊர், பிரதேசம், மாவட்டம், மாகாணம்) பிறையைப் பார்த்தால் அது அந்த நாட்டிற்கே அதில் உள்ள அனைத்து முஸ்ஸிம்களுக்குமே போதுமானதாகும். அதே சமயம் இந்தியா போன்ற நிலப்பரப்பு பரந்து விரிந்த பெரிய நாடுகளாக இருந்தால் அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாநிலத்தின் அதிகார பிரிவுகளுக்கு ஏற்ப நோன்பு, பெருநாட்களின் தினத்தை தீர்மாணிக்கின்றன. எனினும் ஒரே அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ஒன்று பட்டே பெருநாளை கொண்டாடுகிறார்கள். இந்தியா - தமிழகததை பொறுத்த மட்டில் அரசு தலைமை காஜியின் அறிவிப்பிற்கேற்ப நோன்பு எடுப்பதும், பெருநாள் கொண்டாடப் படுகிறது.

ஆகவே மேற்படி உள்ள மூன்று கருத்துக்களிலும் மூன்றாவது கருத்தே குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகிய இந்த நான்கு மூலாதாரங்கள் மூலம் இமாம்கள் சரிகண்டுள்ளார்கள்.  என்பதை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் நாம் நிரூபித்துள்ளோம்.

♣ பிறையை கணக்கிட்டு கொள்ளுதல் பற்றிய அல்குர்ஆன் வசனங்கள்

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 9:36)

♦ ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).(அல்குர்ஆன் : 2:185)

♦ அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.(அல்குர்ஆன் : 10:5)

♦ அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.(அல்குர்ஆன் : 6:96)

♦ இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.(அல்குர்ஆன் : 17:12)

♦ (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 2:189)

♣ பிறையை கணக்கிட்டு மாதம் என்பது இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவும் எடுக்கலாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம்  தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் முஸ்லிம் 1964, 1972,1974, 1975)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு வையுங்கள்;  (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் முஸ்லிம் 1973)

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதகாலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் (அந்த இரவுகளை நான் எண்ணிக்கொண்டே இருந்தேன்) என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை எண்ணிக் கொண்டிருந்தேனே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், ”மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்றார்கள். (நூல் முஸ்லிம் 1977,

மேலும் பார்க்க புகாரி 1910, 1911, 1907, 1908, 1909, 1913 முஸ்லிம் 1965, 1966, 1967, 1968, 1969, 1977, 1978, 1979, 1989)

♣ முதல் பிறை (தலைப்பிறை) பெரிதாகவோ சிறிதாகவோ தென்படலாம்

அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ”பத்னு நக்லா” எனுமிடத்தில் தங்கியிருந்த போது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், ”அது மூன்றாவது பிறை” என்று கூறினர். வேறுசிலர், ”(அல்ல) அது இரண்டாவது பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்த போது, ”நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் ”அது மூன்றாவது பிறை” என்றனர். வேறுசிலர் ”அது இரண்டாவது பிறை” என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு  இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ”எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, ”இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது, ”பார்ப்பதற்காகவே  பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். (நூல் முஸ்லிம் 1984)

♣ பிறை தென்பட்டால் அல்லது தென்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், ”ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (நூல் புகாரி 1906,முஸ்லிம் 1958)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.“ என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.(நூல் புகாரி 1909)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்.“ என இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். (நூல் புகாரி 1900, 1907)

♣ உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்து நோன்பு, இரு பெருநாள் எடுக்கலாமா?

ஒவ்வொரு நாடு-சேதம், மாநிலம், ஊர் எல்லைகளை தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விட்டு விட்டார்கள். அந்த அடிப்படையில் தற்போதைய நாடு, ஊர் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இது நமது நாட்டு, ஊர் சட்டதிட்டங்கள், எல்லைக்கேப்ப மாறுபடும் என்பதால்தான் இதை நமது கையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தந்துவிட்டார்கள்.

ஆகவே உலகில் எங்கு பிறை பார்த்தாலும் (சர்வதேச பிறை) அதை வைத்து உலகம் முழுவதற்கும் ரமலான் அல்லது பெருநாள் பிறந்து விட்டது என்று சொல்வது இஸ்லாத்தில் இல்லாத நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இமாம்கள் கூறாத, மார்க்கம் கற்றுத்தராத விடயமாகும். தமது நாட்டில் பகுதிகளில் பார்க்கப்படும் பிறை தான் நம்மைக்கட்டுப்படுத்தும் என்பதை மேலே மிகத்தெளிவான ஹதீஸ் ஆதாரங்களினால் விளக்கிவிட்டோம். அந்த அடிப்படையில் இமாம்களும் குறிப்பாக ஷாபிஈ மதுஹாப்படியும் ஒவ்வொரு நாடும் தத்தமது பகுதியில் - மாநிலத்தில் பிறையை பார்த்துதான் நோன்பை, பெருநாளை தீர்மானிக்க வேண்டும்.

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம்  தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் முஸ்லிம் 1964, 1972,1974, 1975)

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த  முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை  எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.

பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம்  விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது ”நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ”நாங்கள் வெள்ளிக்கிழமையென்று பிறை கண்டோம்” என்று பதிலளித்தேன். அவர்கள், ”நீயே அதைக் கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், ”ஆம் (நானும் கண்டேன்).  மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ”ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை  நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்” என்று சொன்னார்கள். அதற்கு நான், ”முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கு, ”இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். (நூல் முஸ்லிம் 1983)

♣ சர்வதேச பிறையை பின்பற்றக்கூடாது என அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் பத்வா

இன்னொரு நாட்டில் பிறை பார்த்து நோன்பு நோற்கவோ, நோன்பை முடித்து கொள்ளவோ, பெருநாள் எடுக்கவோ கூடாது. உங்கள் நாட்டில் பிறை பார்த்துதான் நோன்பு நோற்கவும், பெருநாள் கொண்டாடவும் வேண்டும். அதாவது ஒவ்வொரு நாடும் தத்தமது பகுதியில் - மாநிலத்தில் பிறையை பார்த்துதான் நோன்பை,பெருநாளை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சமூகத்தை கூறுப்போட்டு விடும் என்று உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் தாருல் இப்தா பத்வா வெளியிட்டுள்ளது.

♣ நாடு - சேதம், ஊர் ஒற்றுமைக்காக சர்வதேச பிறையை பின்பற்றலாமா?

நோன்பும், இருபெருநாளும் சர்வதேச உலகம் முழுவதிலும் ஒரே நாளில் அமையாமல் சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்களாக பிரிந்து போகிறதே ஏன். சவூதியில் முதல் நாள் என்றால் அடுத்த நாள் இந்தியாவில் நோன்பு எடுப்பது, பெருநாள் கொண்டாடப் படுவது எதனால்? நோன்பு, பெருநாள் என்றைக்கு என்பது முதல் நாள் இரவு வரை ஒரு புதிராக இருப்பது அவசியந்தானா? என்ற கேள்விகள் நமது முஸ்லிம் சமுதாயத்தில் பிரதானமாக எழுகிறது. இதற்கான பதில் சாதரணமானது. தர்க்க விவாதங்களுக்கு தேவையற்றது. எல்லா வகையிலும் எளிதாக இருக்கிற இஸ்லாத்தின் இயல்புக்கு பொருத்தமானது. பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையப் பார்த்து பெருநாளை கொண்டாடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அது போல ஒரு மாதம் என்பது 29 நாட்களாகவும் இருக்கக் கூடும் என்று நபிகள் நாய்கம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இந்த உத்தரவுக்கும், இமாம்களின் கூற்றுக்களுக்கும் கட்டுப்படுவதில் உலகின் அத்தனை கண்டங்களில் வாழ்கிற அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களும்  இத்தனை நூற்றாண்டுகளாக ஒன்று பட்டு நின்றார்கள். இப்போதும் நிற்கிறார்கள்.ஒரு மாதத்தின் 29 நாளில் பிறை தெரிகிறதா என்று பார்க்கிறார்கள். பிறை தென்பட்டால் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாகிறது. பிறை தென்படாவிட்டல் முந்தைய மாதத்தை 30 நாட்களுடையதாக கருதிக் கொள்கிறார்கள். அதற்கடுத்த நாள் பிறை பார்க்க வேண்டிய தேவை இல்லாமலே புதிய மாதத்தின் முதல் நாளாகிவிடுகிறது. முப்பதுக்கு மேல் நாட்கள் இஸ்லாமிய மாதத்தில் இல்லை.

அந்த அடிப்படையில் பிறை தென்படுவது நாட்டுக்கு நாடு மாறு படும். நாட்டுக்கு நாடு தொழுகை நேரம்  மாறுபடுவது போல. ஒரு நாட்டில் பிறை  பார்க்கப்பட்டது தொலைவில் உள்ள மற்றொரு நாட்டில் தாக்கம் செலுத்தும் என்றால் அமெரிக்கர்கள் பிறை பார்க்கிற நேரத்தில் இந்தோனேஷியக் காரர்களுக்கு காலை 9 மணியாகி இருக்கும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் சுபஹ் தொழுகையினை ஒரே நேரத்தில் தடவையில் தொழ வேண்டும் என்று கூறமுடியுமா? அமெரிக்கர்கள் இஷா தொழுகை நேரத்தில் இந்தோனேஷியக் காரர்களுக்கு சுபஹ் தொழுகை மணியாகி இருக்கும். அதில் குழப்பமே மிஞ்சும் இந்தச் சூழலில் முந்தைய  மாதத்தின் 29 நாளில் பிறை தெரிந்தால் பெருநாள் கொண்டாடுங்கள் என்ற வார்த்தையில் இருக்கிற  வழிகாட்டுதல் எல்லோருக்கும் எல்லாகாலத்திலும் பொருந்தக் கூடியது. பின்பற்றுவதற்கு எளியது.

ஆகவே  இதில் உலகளாவிய ஒருமைப்பாடு என்ற கண்ணோட்டத்தை கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணம்  இஸ்லாத்திற்கு இல்லை. ஒற்றுமை என்பது ஒரு பெருநாளை கொண்டாடுவதில் அல்ல நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்துக்கும் இமாம்களின் கூற்றுக்களுக்கும் கட்டுப்படுவதில்  சமுதாயம் ஒன்று பட்டிருக்கிற்தா
என்பதுதான் முக்கியம். இதுவே
நூற்றண்டுகளாக இஸ்லாம் உல்கிற்கு
சொல்லி வருகிற தத்துவமாகும்.

நபிமொழிக் கலை வல்லுனர் ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளருமான இமாம் நவ்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஒரு உறுதியான ஆய்வு முடிவை இறுதியாக அக்கல்வியாளர்கள் முன்வைத்தனர். “லி குல்லி பலதின் ரூயதுஹு “ ஒவ்வொரு ஊரும் அது பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே நபிமொழிகளின் கருத்து என்று  கூறுகிறார்கள்.

இந்தக் காரணங்களால் தான் நோன்பும், இரு பெருநாளும் நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம் வேறு படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு ஒரு புதிய அர்த்தத்தை நோன்பு பிடிப்பதும், பெருநாள் கொண்டாட்டங்களும் தருகின்றன. சில சமயங்களில் வெவ்வேறு நாட்களில் நோன்பை எடுத்துக் கொள்ளுபவர்களும், பெருநாளை கொண்டாடுகிற சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தைக்கு, இமாம்களின் கருத்துக்களுக்கு கட்டுப் படுதல் என்ற விசய்த்தில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

மேலும் இந்தியா போன்ற நிலப்பரப்பு பரந்து விரிந்த நாடுகள், கண்டங்கள் (மாநிலங்கள்) அதிகார பிரிவுகளுக்கு ஏற்ப நோன்பு, பெருநாட்களின் தினத்தை தீர்மாணிக்கின்றன. எனினும் ஒரே அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ஒன்று பட்டே பெருநாளை கொண்டாடுகிறார்கள். இந்தியா - தமிழகததை பொறுத்த மட்டில் அரசு தலைமை காஜியின் அறிவிப்பிற்கேற்ப நோன்பு எடுப்பதும், பெருநாள் கொண்டாடப் படுகிறது. இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றுபடுவதர்கு தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கிற ஒரு அருளான வாய்ப்பு இது. ஆனாலும்,சமுகத்தில் அஜீரண சக்திகளாக இருக்கிற ஒரு சில வழிகெட்ட வஹ்ஹாபி இயக்கங்கள் மட்டுமே உள்ளூருக்குள் குழப்பததை ஏற்படுத்தி விளம்பரங்காண முந்திக் கொண்டு, சுன்னத் வல் ஜமாஅத் உண்மை முஸ்லிம்களுக்கு ஒருநாள் முன்னதாக குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் கருத்துக்களுக்கு மாற்றமாக சர்வதேச பிறையை பின்பற்றி நோன்பு எடுத்து , பெருநாள் கொண்டாடி, ஒற்றுமையாக வாழும் இஸ்லாமிய சமூகத்தில்  பிரிவினையை உண்டுபண்ணும் வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 3:105)


Comments

Popular posts from this blog

அண்ணலாரின் முன்னறிவிப்பு