இஸ்லாத்தின் பார்வையில் (கொரோனா வைரஸ் / Covid 19) போன்ற தொற்று நோய்கள் உண்டா?



இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?

உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் தொற்று நோய்கள் (கொரோனா நோய், பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது) பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

♦️ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?'' என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
(நூல்: புகாரி 5707, 5717)

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.

♣️ இஸ்லாத்தில்  (கொரோனா வைரஸ் / Covid 19) போன்ற தொற்று நோய்கள் உண்டு என்பதற்கான ஆதாரங்கள்.

ஆமிர் இப்னு ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) உஸாமா இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா( ரலியல்லாஹு அன்ஹு), 'இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும்.

அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று கூறினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுந் நஸ்ர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு)

(நூல்: ஸஹீஹுல் புகாரி: 3473)

♦️ நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள் நான் இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

(நூல்: ஸஹீஹுல் புகாரி: 3474)

♣️  (கொரோனா வைரஸ் / Covid 19) போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் போது ஒரு முஸ்லிம் நடந்து கொள்ள வேண்டிய செயல்முறை. ஈருலக வழிகாட்டி நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தவை.

♦️ உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "ஷாம் நாட்டிற்குப் போகலாமா?'' என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். அவர்கள், "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(நூல்: புகாரி  5729, 5730

♦️ கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) (கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப) தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் (ஷஹீத்) செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.

(நூல்: புகாரி 3474)

♦️ ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள். என நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் நமக்கு
வழிகாட்டினார்கள்.

(நூல்:புகாரி 5728)

எனவே நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. ஆகவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

♣️ இஸ்லாத்தில் (கொரோனா வைரஸ் / Covid 19) போன்ற தொற்று நோயின் போது பொறுமை காப்பவருக்குக் கிடைக்கும் நன்மை

நபி (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள் ‘நான் இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான்.

எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்  என்று கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5734)

எனவே இஸ்லாத்தில்தொற்று நோய் உண்டு என்பதை மேலே உள்ள ஹதீஸ்கள் விளக்குகின்றது. அந்த தொற்று நோய்கள் கிருமிகள் மூலமாக நோய்கள் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்றும் இவருக்கு கொரோனா நோய் வந்ததால்தான் எனக்கும் கொரோனா நோய் பரவியது என்றும் கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அனைத்து  தொற்று நோய்யும் பரவுகிறது என்பதையும் மறுக்கக் கூடாது.


Comments

Popular posts from this blog

அண்ணலாரின் முன்னறிவிப்பு